சனி, 23 நவம்பர், 2013

ஔவை யார் ? ஒருவரா? பலரா?

    
                     தமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தோன்றிய பெண்பால் புலவர்களுள் யாவரும் அறிந்த தலைசிறந்த அறிஞராகத் தொன்றுதொட்டுப் பேரோடும் புகழோடும் விளங்கி வருபவர் ஔவையார்.
     நம் நாட்டில் ஔவையார் என்று குறிப்பிடுகின்ற பெருமைக்குரியவர் ஒருவர் அல்லர்; பலர் என்று கூறுகின்றனர். பண்டைத் தமிழறிஞர்களுக்கு முறையான வரலாறு குறிக்கப்படாத குறை பெருங்குறையாக இருந்து வருகிறது.  எனவே, பல்வேறு காலத்தில் தோன்றிய மொழிப்புலமை மிக்க பெண்ணறிஞர் பலர் ஔவையார் என்ற பொதுச்சிறப்புப் பெயரால் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர். 
     பேராசிரியர் மது.ச. விமலானந்தன் அவர்கள் சங்ககால ஔவை, சங்கம் மருவிய கால ஔவை, சோழர் கால ஔவை, பிற்கால ஔவை என நால்வகை ஔவையார் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.  அதியனின் நண்பர், பாரி மகளிர்க்கு மணமுடித்தவர்,  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி பாடியவர்,  ஞானக் குறள், விநாயகர் அகவல் பாடியவர் எனப் பகுத்துக் காட்டுகிறார்.
      பேராசிரியர் பூவை அமுதன் அவர்கள் “ஔவை” எனும் தன்னுடைய நூலில் சங்க கால ஔவை, இடைக்கால ஔவை என இரு வகை அவ்வையார்களைச் சுட்டுகிறார்.
      முனைவர். ஜே.ஆர். இலக்குமி அவர்கள் “ வரலாற்றில் ஔவை” எனும் தமது நூலில் ஆறு அல்லது ஏழு ஔவையார் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளார். 
      கவிஞர் இன்குலாப் அவர்கள் “ஔவை” எனும் தனது நூலில் சங்க கால ஔவை நம்மிடையே தொலைந்துபோய்விட்டார் என்றும் பிற்கால ஔவையின் உருவமே நம்மில் நிழலாடுவதையும் சுட்டுகிறார்.      ஔவையார் என்றாலே மூதாட்டியின் உருவமே நமது மனக்கண்ணில் பிம்பமாகத் தெரிகிறது. காரணம் ஔவைப் பாட்டி எனும் வழக்கு. மேலும்,  இதற்கு அரணாகத் திரைப்படத்தில் ஔவை, புராணக் காட்சிகளுடன் பாட்டி வடிவில் படைக்கப்பட்டுவிட்டார்.  ஆனால்,  ஔவையார் சங்க காலத்தில் ஆடல், பாடல், இசை வல்ல பாண் குடியில் தோன்றியவர். பாண் குடியில் பிறந்த பெண் பாடினி எனப்பட்டாள்.
        தொல்காப்பியப் பொருளதிகாரக் கற்பியலில் ஊடலை உணர்த்தும் வாயில்கள் பற்றிய நூற்பாவில் “ பாட்டி “ சொல் “ பாடினி “ எனும் பொருளில் தொல்காப்பியரால் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.  மேலும், பெருமைக்குரிய பெண்களைக் குறிக்க “ பிராட்டி “  என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது.  பிராட்டி என்பதே பாட்டி எனவும் மருவி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.   
        அகத்தியர் பெயரில் ஒருவரல்லர்; பலர்.  கபிலர், பரணர், நக்கீரர், கல்லாடர் ஆகிய சங்கப் புலவர்களின் பெயர்களும் பக்தி இயக்கக் கால இலக்கியத் தொகுப்புகளில் காணலாகின்றன.   மக்களிடையே சிறப்புப் பெற்றுத் திகழ்பவரின் பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டி அழகுபார்ப்பது போல, (சான்றாக அஜித், விஜய், விக்ரம்....இன்னமும் எத்தனையோ)  ஔவையின் பெயரும் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது ஒளவையாரின் பெயரில் இலக்கியங்கள் படைத்தால் வரலாற்றில் நிலைக்கும் எனவும் நம்பிவிட்டனரோ?   எப்படியாயினும் சங்ககால ஔவை மூதாட்டி அல்லள்;  அதியனின் தூதுவராக விளங்கி நாட்டுச் சமரசத்திற்குப் போராடிய வீரப் பெண்மணி ஆவாள்.  

திங்கள், 11 நவம்பர், 2013

தூவும் மழையும் அளபெடையும்

           “அடடா அடடா அடை மழைடா” என்று இனி வரும் காலங்களில் இளைய சமுதாயம் படங்களில் தான் மழையைப் பாரக்கமுடியுமோ என்ற அளவிற்கு மழை பொய்யெனப் பெய்து வருகிறது.  இந்த உலகம் இயங்க மழைநீர் ஆதாரமாக இருப்பதால் தான் அதனைப் பூலோக அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். வான் சிறப்பு அதிகாரத்தில் அனைவரும் அறிந்த குறட்பா, 
                 “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
                  துப்பாய தூஉம் மழை”.
இந்தக் குறட்பாவை எவரும் “தூவும் மழை” என்றே வாசிக்கின்றனர். “தூஉம்” என்பதில் உள்ள அளபெடையைப் பலரும் மறந்துவிட்டனர் போலும்!
     உண்பவருக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளையவைப்பதுடன், தானும் உணவாக ஆனது மழை நீர்.   துப்பு + ஆயதூஉம்  = துப்பாய தூஉம் எனச் செய்யுளில் நிற்கிறது. எனவே, துப்பு ஆயதூஉம் எனச் சரியாக அசை பிரித்து வாசித்தால் பொருளில் பிழைபடாது. இல்லையேல் செய்யுளில், மழை மட்டுமே தூவுமே தவிர “மழை நீர் உணவு” என்ற பொருள் வராது.
     தமிழில் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள் உண்டு.  இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள் உண்டு. மூன்று மாத்திரை ஒலிக்கும் எழுத்து என்று தனியாக இல்லை.. அவ்வாறு ஒலித்திட நேர்கின்ற போது நெடிலுக்கு இணையான இன எழுத்தைப் பக்கத்தில் இட்டு எழுத வேண்டும் மேலும், அந்த ஒலி தனித் தனியே, அதாவது ஆ-அ, ஈ-இ , ஊ-உ, ஏ-எ, ஓ-ஒ, ஐ-இ என விட்டிசைக்காமல் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ என நீட்டி ஒலிக்க வேண்டும்.  அளபெடையை நீருடன் நீர் கலந்தாற்போல ஒலிக்கவேண்டும். இந்த இலக்கணம் கூறும் போதே தொல்காப்பியர்,
            “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
            கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் “
என்று நம்மை அளபெடைப்  பயிற்சியில் ஈடுபடுத்தச் செய்கிறார்.
எனவே, ஒலிப்புமுறையைச் சரியாகக் கற்றுத் தந்தால்  தமிழின் நீர்மை இனிமையினும் இனிமையே!


வெள்ளி, 8 நவம்பர், 2013

வருக வருகவே

எனது வலைப்பூ " இலக்கணத் தேறல்".
தேடினால் எளிதில் கிட்டும்
தமிழின் மயக்கம்  இங்கு தெளிவாகும்.
மயக்கும் தேறல் அன்று , இது
தெளிய வைக்கும் தேறல்.
இலக்கணத் தேடல், சமூகப் பார்வை,
கல்விச் சிந்தனை முதலானவற்றை அடக்கும் தேத்திறால்..
    வருக வருக உங்களை ஆலோசனை தருக 

மரபுகள்

ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் மரபு பற்றிய இலக்கணத்தை மரபியலில் உரைக்கின்றது. மகவு, குட்டி, கன்று, பார்ப்பு, பறழ், குருளை, பிள்ளை முதலியன இளமைப் பெயர்கள். அந்த வகையில் மாட்டின் இளமைப் பெயர் கன்று. மனிதனின் இளமைப் பெயர் மகவு, பிள்ளை என்பன. பறவைகளின் இளமைப்பெயர் பார்ப்பு. மானின் இளமைப் பெயர் கன்று.
          ஆனால், சமீபத்திய திரைப்படப் பாடல் ஒன்றில் " மான் குட்டியே புள்ளி மான் குட்டியே" என வருகிறது.  இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்ற மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிக்கு விடையளிக்கும் போது " மான் கன்று " என்று எழுதுவதற்குப் பதிலாக மான் குட்டி என்று விடையளிக்கின்றனர்.
          ஊடகத்தின் தாக்கம் இலக்கணத்தை விஞ்சி விட்டது. எனவே, மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கின்ற பொது தற்போதைய திரைப் படங்களில் வரும் காட்சிகளைக் கொண்டு விளக்குவது மட்டுமின்றி, தவறாக இடம் பெரும் தகவல்களையும் சரிப் படுத்திச் சொல்லித் தர வேண்டிய கட்டாயம் நம் மொழி ஆசிரியர்களுக்கு உண்டு. 

தன்னம்பிக்கை

கற்களுக்குள் கண்கள் கவரும் கலை உண்டு
சொற்களுக்குள் ஞாலம் சுவைகவி உண்டு
மனத்தை திடப்படுத்து மையல் உறாதே
உனதடை யாளம் உணர் .

வெள்ளி, 11 அக்டோபர், 2013

அயலவர் இலக்கணப் பங்கு

காலம் கடந்து வாழும் நம் தமிழ் மொழி இலக்கனத்திற்கெனத் தனி வரலாறு கொண்டுள்ளது. தொல்காப்பியம் தொடங்கி அதன் வளர்ச்சியாக வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், தண்டி, புறப்பொருள் வெண்பா மாலை எனத் தமிழன்னை தன் இலக்கணப் பரப்பை விரிக்கின்றாள்.
அயல்நாட்டினர் தமிழைக் கற்றதுடன் படைக்கவும் செய்தனர். அவ்வகையில், இலக்கணப் படைப்புகள் மேலும் பெருகின.
ஈழத்தவர் பங்கு இதில் சிறப்பாக உள்ளது. இலக்கண நூலாசிரியர்கலாகவும், உரையாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் விளங்கினர். ஆறுமுகநாவலர் அவர்கள் இலக்கண வினாவிடை, இலக்கன்ச்சுருக்கம் படைத்தார். நன்னூலுக்குக் காண்டிகை உரை எழுதினார். பல இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.
தமிழ் பேசுவோர் அல்லாத அயலவரும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தனர். வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் சிறப்பாக இதில் கால் பதித்தது என்றால் அது மிகை இல்லை. 
>